மேலும்

பேரெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் திடலில், இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர்.

இனஅழிப்பு போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் இந்த நிகழ்வு, இன்று காலை 10.15 மணியளவில் ஆரம்பமாகியது.

தென்கயிலை ஆதீனம், தவத்திரு அகத்தியர் அடிகளார், முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தை வாசித்தார்.

அதையடுத்து, காலை 10.29 மணிக்கு நினைவொலி எழுப்பட்டதை தொடர்ந்து,  10.30 மணிக்கு உயிர்நீத்த உறவுகளுக்காக ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இறுதிப் போரின் போது, தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா  அவர்கள்  பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

சமநேரத்தில், உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், சுடர்களை ஏற்றியதை அடுத்து, மலர் வணக்கம் இடம்பெற்றது.

மதகுருமார்,பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு இனஅழிப்பு போரில் உயிர்நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாதளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் ஒன்றுகூடி உணர்வெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இன்று தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன்,  முள்ளிவாய்க்கால் பேரவலத்தை மக்களிடம் கடத்தும் வகையிலான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *