இந்திய- பிரித்தானிய உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு ஆபத்து
இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள, சுதந்திர வர்த்தக உடன்பாடு சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்த அதிக வரிகளுடன் சிறிலங்கா ஏற்கனவே போராடி வரும், நிலையில், இந்தியா- பிரித்தானியா இடையில் செய்து கொள்ளப்பட்டுள் உடன்பாடு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என ரடட ஹெடக் சமூக சேவை திட்ட அமைப்பாளர் சரத் கலுகமகே தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா தற்போது சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குகிறது.
2024 ஆம் ஆண்டில், பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி வருமானம், 903.72 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இவ்வாறான நிலையில், இந்தியாவின் வழியைப் பின்பற்றி பிரித்தானியாவுடன் சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சு நடத்தத் தவறினால், நாடு விரைவில் கடுமையான பொருளாதார பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
இந்திய-பிரித்தானிய உடன்பாட்டின் விதிகள் இந்தியாவின் திறமையான நிபுணர்கள், பிரித்தானியாவின் வேலைச் சந்தையை இலகுவாக அணுகுவதற்கான கதவுகளைத் திறக்கக் கூடும்.
இது சிறிலங்காவின் தொழிலாளர் ஏற்றுமதி மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை ஆபத்துக்குள் தள்ளி விடும்.
சிறிலங்காவின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் பிரித்தானியாவுடன், முன்கூட்டியே பேச்சுக்களில் ஈடுபடவும், மூலோபாய வர்த்தக கட்டமைப்பை உருவாக்கவும் வேண்டிய அவசரத் தேவை உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
