இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா விலக வேண்டும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட இரகசியமான- ஆபத்தான பாதுகாப்பு உடன்பாட்டை உடனடியாக ரத்துச் வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நுகேகொடையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட, இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த உடன்பாடு தேசத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம். மக்களுக்கு எதிரான குற்றம்.
இரு அரசாங்கங்களும் இந்த உடன்பாட்டை மறைத்து வைக்க முயற்சித்தன.
அனைத்து இணைப்புகளுடன் பகிரங்கப்படுத்தப்பட்ட, 1987 இந்திய-சிறிலங்கா உடன்பாட்டைப் போலன்றி, இந்த உடன்பாடு மக்களிடமிருந்து மறைக்கப்பட்டது.
இப்போது கூட, இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வேறு எத்தனை உடன்பாடுகள் உள்ளன என்று எங்களுக்குத் தெரியாது.
உடன்பாட்டின் பிரதிகள் எதுவும் இல்லை என்று, தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இருந்து பதில் கிடைத்தது.
இது உயர்மட்டத்தில் கூட, வெளிப்படைத்தன்மை குறித்த கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
சிறிலங்கா அதிபர் அதைப் பார்த்தாரா என்று கூட கேள்வி எழுப்பலாம், ஏனென்றால், அவரது செயலகத்தில் அது இல்லை.
இந்த உடன்பாட்டின் கீழ் மாற்றப்பட்ட ஆயுதங்கள் அல்லது இராணுவ சொத்துக்களை கூட வெளிப்படுத்த முடியாது.
பிரிவு 10, எந்தவொரு நாடும், சர்வதேச நீதிமன்றங்களுக்கு சர்ச்சைகளை எடுத்துச் செல்வதையோ அல்லது மூன்றாம் தரப்பு நடுவர்கள் ஈடுபடுத்துவதையோ தடை செய்கிறது.
தற்போது ஆட்சியிலுள்ள ஜேவிபி, 1987 இல் இந்திய-சிறிலங்கா உடன்பாட்டை, கடுமையாக எதிர்த்தது.
இப்போது அவர்கள் இன்னும் ஆபத்தான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் மூன்று மாத அறிவிப்புடன் உடன்பாட்டில் இருந்து விலக, பிரிவு 12 அனுமதிக்கிறது.
அதனைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் உடன்பாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
