சர்வதேச விசாரணைக்கு சிறிலங்கா அரசு ஏன் அஞ்சுகிறது? – கஜேந்திரகுமார் கேள்வி
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிறிலங்கா அரசாங்கம் கருதினால், சர்வதேச விசாரணைகளிற்கு ஏன் அஞ்சுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிராம்ப்டன் தமிழினப் படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பாக, கனடிய தூதுவரை அழைத்து எதிர்ப்பு வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின், சமூக ஊடகப் பதிவிற்கு, பதிலளிக்கும் வகையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் ஏன் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதில் கைச்சாத்திட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது?
உண்மை என்னவென்றால் அமைச்சரே, அரசாங்கம் உண்மையை கண்டு அஞ்சி நடுங்குகின்றது.
உண்மையே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி.
ஆனால், முன்னைய அரசாங்கங்கள் போன்று, உங்கள் அரசாங்கமும் அதனை மறுக்கின்றது.” என்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
