பிரதமருக்கு எதிரான விசாரணை – தட்டிக்கழிக்கும் ஆணைக்குழு, காவல்துறை
தேர்தல் பரப்புரைக் காலத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிறிலங்கா காவல்துறையும் தட்டிக்கழித்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முந்திய, அமைதிக் காலத்தில் பரப்புரையில் ஈடுபடுவது தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய கூட்டம் ஒன்றில் நிகழ்த்திய உரை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தன.
இதுகுறித்து, விசாரணை நடத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறிலங்கா காவல்துறைக்கு அறிவித்த போதும், இதுபோன்ற விடயங்களைக் கையாள வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழு தான் என்றும், காவல்துறை அல்ல என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு கைவிரித்துள்ளது.
இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
“தேர்தல் காலங்களில் காவல்துறைக்கு பங்கு இருந்தாலும், ஒரு அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுகிறதா இல்லையா என்பதை விசாரிக்கும் பொறுப்பு அவர்களுக்குரியதல்ல.
இது தேர்தல்கள் ஆணைக்குழு கவனிக்க வேண்டிய விடயம். இதுபோன்ற விடயங்களில் ஈடுபடுவது காவல்துறையின் வேலை அல்ல.
பிரதமரின் அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுகிறதா இல்லையா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இதுபற்றி பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
பிரதமரின் அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தின் பிரதிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நிஹால் அபேசிங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
