கனடா தமிழினப் படுகொலை நினைவகம் – கொந்தளிக்கிறார் நாமல்
கனடாவில் தமிழினப் படுகொலை நினைவகம், திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதுதொடர்பாக சிறிலங்கா அரசு உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்து நாமல் ராஜபக்ச, கனடிய தூதுவரை, வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து, விடுதலைப் புலிகளுடனான போர் தொடர்பான விடயங்களை கனடா ஆதரிக்க வேண்டும் என்று முறையாகக் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக் கட்டங்களில் சிறிலங்கா இராணுவம் தொடர்பாக கூறப்படும் எந்த இனப்படுகொலைக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாது என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக தவறான இனப்படுகொலை கதையை கனடா ஊக்குவிப்பதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக எந்த இனப்படுகொலை குற்றச்சாட்டும் சர்வதேச சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறந்து வைத்திருப்பது கவலையளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பான அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
