இந்திய- பாகிஸ்தான் போரில் சிறிலங்கா விமானப்படை யார் பக்கம்?
இந்திய- பாகிஸ்தான் பதற்ற நிலை தொடருகின்ற நிலையில் சிறிலங்கா விமானப்படையை தயார்நிலையில் வைத்திருக்கும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் ஏரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
தெற்காசிய போர்ப் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா விமானப்படையை தயார் நிலையில் வைத்திருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விமானப்படைக்கு எந்தவொரு சிறப்பு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
சிறிலங்கா அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கும் நிலையில், விமானப்படையும் நடுநிலைக் கொள்கையுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விமானப்படை உலங்குவானூர்தி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெறுவதாகவும், நல்ல நிலையில் இருந்த அந்த உலங்குவானூர்தியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறூப் கப்டன் ஏரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விமானப்படை பெல் -212 உலங்குவானூர்திகளை பறப்பில் இருந்து நிறுத்தி வைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
