10 ஆவது நாளில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்- சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கிறார்
கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
கேப்பாப்புலவு மீள்குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சிறிலங்கா பிரதமருடன் இன்று கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விமானப்படைத் தளபதி, மற்றும் ஏனைய படை அதிகாரிகளுடன், கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்து தர முடியும்.
இந்தக் காணிகள் தனியாருடையவை என்று விமானப்படையினர் அறிந்திருக்கவில்லை. போர்க்காலத்தில் வன விலங்குகள் திணைக்களத்திடம் இருந்தே அவர்கள் இந்தக் காணிகளைப் பெற்றுள்ளனர்.
போர்க்காலத்தில் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறிலங்கா விமானப்படை இங்கு ஒரு விமான ஓடுபாதையை அமைத்துள்ளது.
இப்போது அந்த விமான ஓடுபாதை இராணுவத் தேவைக்கு மாத்திரமன்றி பொதுமக்களின் விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி இந்த விவகாரத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.