சவுதி அரேபிய சிறையில் அனோஜன் மீது தாக்குதல் – உயிருக்கு ஆபத்து என அச்சம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூலில் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தீவிரமான கவலை எழுந்துள்ளது.
எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், சிறிலங்கா அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள சிறிலங்கா தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் மீதான வழக்கு அல்லது வழங்கப்பட்டுள்ள தண்டனை எதுவாக இருந்தாலும், அரச காவலில் இருக்கும் ஒருவரின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணையும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
