கொழும்பு பேச்சுக்கள் பெறுமதியற்றது என்கிறது இந்தியா
கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
பிராந்தியப் பாதுகாப்பு மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் மூத்த இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த வாரம் கொழும்பில் சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் இந்த விளக்கமளித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, மாலைதீவுகள், பிரித்தானியா மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக மூலோபாய ஆய்வுக் கழகத்தின் (IISS) மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிர்சி, அதிகாரப்பூர்வமற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்கு புதுடில்லியிடம் எந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரமோ முக்கியத்துவமோ இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
“நான் அந்த அறிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவை குறித்து எனக்குத் தெரியும்.
உலகம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில், டசின் கணக்கான இடங்களில் இதுபோன்ற டசின் கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் புதிதாகவோ, சிறப்பாகவோ எதுவும் இல்லை.
எங்களைப் பொறுத்தவரை, இவை தனியார் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் நிகழ்வுகள்.
எங்களைப் பொறுத்தவரை இவற்றில் அதிகாரப்பூர்வமான எதுவும் இல்லை.
பாகிஸ்தான் அரசாங்கத்திற்காக என்னால் பேச முடியாது, ஆனால் இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த வருகைகளில் எந்த அதிகாரப்பூர்வப் பங்கேற்போ, அதிகாரப்பூர்வ ஆதரவோ அல்லது ஈடுபாடோ இல்லை.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தூதுவர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும்போது, அவர்கள் தங்களுக்காகவே பேசுகிறார்கள் மற்றும் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தையே முன்வைக்கிறார்கள்.
அவர்கள் எந்த வகையிலும் இந்திய அரசாங்கத்தின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, அவர்களால் எந்த வகையிலும் அவ்வாறு செய்ய முடியாது.
நாங்கள் உண்மையில் இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொள்வதில்லை. எங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு உண்மையில் அதிக மதிப்பு இல்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிலை ராஜதந்திரம் என்பது பொதுவாக ஓய்வுபெற்ற தூதுவர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள், சிந்தனைக் குழு நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையேயான முறைசாரா உரையாடலை உள்ளடக்கியது.
இவர்கள் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மோதல் முகாமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்காகத் தங்கள் தனிப்பட்ட தகுதிகளில் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் கலந்துரையாடல் கொழும்பில் உள்ள ஒரு விடுதியில் இரண்டு நாட்கள் தனித்தனி அமர்வுகளாக நடைபெற்றது.
இந்தியக் குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே, இந்தியா பவுண்டேசன் தலைவரும், முன்னாள் பாஜக தேசிய செயலாளருமான ராம் மாதவ், முன்னாள் இராஜதந்திரி ரூச்சி கனஷியாம் ஆகியோரும், பாகிஸ்தான் குழுவில் வெளியுறவு அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான தலைமை பணிப்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஷெர்ரி ரஹ்மான் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ஃபந்தியார் அலி கான் பட்டோடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிந்து நதி நீர் பிரச்சினை, பதற்றம் அதிகரிக்கும் காலங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்துதல், மற்றும் எதிர்கால இராணுவ மோதல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த விவாதங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஒப்பரேசன் சிந்துர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, மே 2025-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பிறகு நடைபெற்ற தொடர்ச்சியான முறைசாரா இரண்டாம் கட்ட சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தக் கொழும்பு சந்திப்பு அமைந்தது.
இந்த மாநாட்டிற்காக சிறிலங்கா வந்திருந்த, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூர், பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் கலந்துகொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்புக் குழுக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
