மேலும்

சிறிலங்கா வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 15 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்துள்ளது.

தடுப்புக்காவலில் உள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக் கூடிய பிற இடங்களில் உள்ள மக்களுக்கான சீர்திருத்தங்களையும் பாதுகாப்புகளையும் அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை மதிப்பிடுவதே இந்தக் குழுவின் வருகையின் நோக்கமாகும்.

“2019ஆம் ஆண்டில் நாங்கள் மேற்கொண்ட கடைசிப் பயணத்தின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் தனது தேசியத் தடுப்புப் பொறிமுறையை நியமித்துள்ளது.

இது சித்திரவதைத் தடுப்பில் ஒரு முக்கியப் படியாகும் என்று சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுன் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

“தடுப்புப் பயணங்களை மேற்கொள்வதுடன்,, இந்தப் பொறிமுறையின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வதும், கடந்த ஆண்டுகளில் எங்கள் பரிந்துரைகளை அதிகாரிகள் எவ்வாறு செயல்படுத்தியுள்ளனர் என்பதை மதிப்பிடுவதும் எங்களின்  பயணம் நோக்கமாக உள்ளது என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான எங்களின் கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா தடுப்புப் பொறிமுறையுடன் இணைந்து பணியாற்றுவதையும், கூட்டுப் பயணங்களை மேற்கொள்வதையும் நாங்கள் குறிப்பாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்ப நெறிமுறையில் சிறிலங்கா 2017-ஆம் ஆண்டில் இணைந்தது.

இந்தப் பயணத்தின் போது, ஐ.நா சிறப்புக் குழுவின் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், தேசிய தடுப்புப் பொறிமுறையின் உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பிற ஐ.நா. முகமைகளைச் சந்திக்கவுள்ளனர.

பயணத்தின் முடிவில், ஐ.நா உபகுழு தனது இரகசியமான பூர்வாங்க அவதானிப்புகளை சிறிலங்கா  அரசாங்கத்திற்கும் தேசிய தடுப்புப் பொறிமுறைக்கும் சமர்ப்பிக்கும்.

அதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் குழு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட ஒரு இரகசிய அறிக்கையை உறுப்பு நாடுகளுக்காகத் தயாரிக்கும்.

சிறிலங்கா அதிகாரிகள் அதனைப் பகிரங்கப்படுத்தக் கோரும் வரை அந்த அறிக்கை இரகசியமாகவே இருக்கும்.

2019-ஆம் ஆண்டு சிறிலங்கா  பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட  ஐ.நா உபகுழுவின் அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

கொழும்பு வரும் ஐ.நா உபகுழுவில்,  ஆயிஷா ஷுஜூன் முஹம்மட் (மாலைதீவுகள்), ஜேக்கப் ஜூலியன் செபெக் (போலந்து), நிகா க்வாரட்ஸ்கெலியா (ஜோர்ஜியா), அனிகா டோம்சிக் (குரோஷியா) மற்றும்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தைச் சேர்ந்த இரண்டு மனித உரிமை அதிகாரிகள் ஆகியோர் அடங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *