மேலும்

கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ

சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட  2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில்  திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

உள்ளூர் விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகள் குழுவொன்று, கொழும்பு வந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருடப்பட்ட நிதி, அமெரிக்காவில் உள்ள நிதி அமைப்புகள் வழியாக, குறிப்பாக இரண்டு வெவ்வேறு அமெரிக்க மாகாணங்களில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த விசாரணை அனைத்துலக அளவில் திருப்பத்தை சந்தித்துள்ளது.

எவ்பிஐ அதிகாரிகள் குழு, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருப்பதாகவும், அங்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களுடன் பல விரிவான சுற்று சந்திப்புகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட நிதியின் டிஜிட்டல் தடயங்களைக் கண்டறிய, ஒரு அமெரிக்க  குழு தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து களத்தில் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2.5 மில்லியன் டொலர் காணாமல்போனதுடன் தொடர்புடைய இணைய மோசடியாளர்களை மறைக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனத்தை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இணைய வணிகப் பதிவு சேவைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் “பிஸ் சொல்யூஷன்ஸ்” (Biz Solutions) என்ற மூன்றாம் தரப்பு நிறுவனம் வழியாக அந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த இணையவழி ஊடுருவல், வெளிநாட்டு வளங்கள் துறையை (ERD) குறிவைத்ததுடன், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் தொடர்பு வழிகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலையும் உள்ளடக்கியிருந்தது.

விசாரணைகளில் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்காவில் வசிக்கும் இந்த மோசடியில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், தீவிரமான கூட்டு முயற்சி இருந்தபோதிலும், துல்லியமான பரிவர்த்தனைப் பாதைகளை இன்னும் உறுதியாகச் சரிபார்க்கவோ அல்லது மில்லியன் கணக்கான பணம் இறுதியில் சென்றடைந்த இறுதி வங்கிக் கணக்குகளை அடையாளம் காணவோ முடியவில்லை என்று புலனாய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தப் பணம் எந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது அல்லது எந்த முறையில் வரவு வைக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

தேவையான தொழில்நுட்பக் கருவிகளையும் முழு ஒத்துழைப்பையும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்க எவ்பிஐ ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *