மேலும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு,  சட்டமா அதிபர் திணைக்களம் மூலம், இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இதுதொடர்பான பரபரப்புக்  குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களிலும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்படும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் வலையமைப்பிலும், முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே முக்கிய பங்கு வகித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பிரான்சில், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் இருந்து புலனாய்வாளர்கள் ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், இது நடைபெற்று வரும் ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகளில் ஒரு முக்கியத் திருப்புமுனை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழு ஒன்று பிரான்சுக்குச் சென்று, சிறிலங்கா தூதுவரின் இல்லத்தில் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பீரிஸ் கூறினார்.

அந்த வாக்குமூலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விரிவான விவரங்கள் அடங்கியிருந்தன.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் சுரேஷ் சாலே “மூல மூளையாக” செயற்பட்டதாகவும், இந்த நடவடிக்கை ஒரு அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும்  திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைக்குச் சென்று சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையனைச் சந்தித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச அதிபரான ஒரு வாரத்திற்குள் அவர் விடுவிக்கப்படுவார் என்று பிள்ளையனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், புலனாய்வுத் தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, இராணுவப் புலனாய்வுத் தலைவராகப் பணியாற்றிய சுரேஸ் சாலே  அரச புலனாய்வு சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2017 மார்ச் 10 ஆம் நாள், அலியார் சந்தி மோதலைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் என அடையாளம் காணப்பட்ட சைனி உள்ளிட்ட உறுப்பினர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பிள்ளையானிடமிருந்து பிணைக்கான நிதியுதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு ரூ. 250,000 ரூபா பொது நிதியிலிருந்து வழங்கியதுடன், பிள்ளையான் 50,000 ரூபா பங்களித்திருந்தார்.   இந்த ஏற்பாடு சுரேஸ் சாலேயின் வேண்டுகோளின் பேரில் நடந்தது.

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைப் பாதுகாக்க பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பிள்ளையானுடன் தொடர்புடைய உறுப்பினர்களும், இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பல நபர்களும் இணைந்து, அரசியல் உள்நோக்கம் கொண்ட கூலிப்படைக் கொலைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

ஊடகவியலாளர்களான பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல், கீத் நொயார் மீதான தாக்குதல், லசந்த விக்ரமசிங்கவின் கொலை மற்றும் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் ஆகியவை இந்தக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்களில் அடங்கும்.

பிள்ளையானின் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இராணுவப் புலனாய்வுத் துறை மூலம் சம்பளம் பெற்றனர்.

சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கான சட்டக் கட்டணங்களைச் செலுத்தவும் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், அசாத் மௌலானாவின் குடும்பத்தை சாலே,  அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதிக்கு மாற்றினார்.

அசாத் மௌலானாவுக்கு ஒரு தூதரகத்தில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விடுதிப் பதிவுகளை புலனாய்வாளர்கள் பெற்றுள்ளனர் என்றும், பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சாலே சார்பாக முன்னிலையான சட்டவாளர் சவிந்திர பெர்னாண்டோ, இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

குறுக்கு விசாரணை மூலம் சோதிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சவால் செய்யப்படாவிட்டால், அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களைத் தொடர்ந்து, சாலேயின்  முன்னிலை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரிவு 127-இன் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் அளித்த விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் மீதான தீர்ப்புகள் ஜூலை 1 ஆம் நாள்  வழங்கப்படும் என்று நீதிவான் அறிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை நடைபெறும் வரை, சுரேஸ் சாலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *