இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிக்கான களமாக மாற்றப்படக்கூடாது
இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாற்றப்படக் கூடாது என்றும், அது நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக இருக்கக்கூடாது, மாறாக பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு பரந்த தளமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இது அமைதி, வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் பெருங்கடலாக பரிணமிக்க வேண்டும்.
இத்தகைய தொலைநோக்குப் பார்வை, பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மற்றும் பரந்த அனைத்துலக சமூகத்தின் பொதுவான நலன்களைப் பிரதிபலிக்கிறது.
இதற்கு எதிரான அணுகுமுறைகள் ஆதரவைப் பெறத் தவறிவிடும்.
உலகளாவிய வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கான ஒரு வழித்தடமாக இந்தியப் பெருங்கடல் நீண்டகாலமாக முக்கியத்துவம் பெற்று வந்திருக்கிறது.
கிழக்கு-மேற்கு கடல்வழிப் பாதைகளில் ஒரு முக்கிய மையமாகச் செயல்படுவதால், இந்தியப் பெருங்கடலின் மையத்தில் சிறிலங்கா ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலைப்பாடு, பிராந்தியப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் சிறிலங்கா ஒரு தனித்துவமான மற்றும் பெருகிவரும் செல்வாக்குமிக்க பங்கை வகிக்க வழிவகுத்துள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின் கீழ், சீனா-சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பு அண்மைய ஆண்டுகளில் “பயனுள்ள முடிவுகளை” அளித்துள்ளது.
துறைமுகக் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் பொருளாதார நடவடிக்கைகள், மற்றும் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும், சீன மற்றும் சிறிலங்கா விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்படும் வழக்கமான கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிகள் பல்வேறு இடையூறுகள் காரணமாகத் தாமதங்களைச் சந்தித்துள்ளன.
இந்த விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் தனது இறையாண்மை, கண்ணியம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு, விரைவில் சரியான முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள நாடுகள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சி, பொது நலனை மேம்படுத்துதல் மற்றும் இணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
பரந்த கடல்கள் மீன்கள் துள்ளிக் குதிக்கவும், எல்லையற்ற வானம் பறவைகள் உயரப் பறக்கவும் வழிவகுக்கின்றன. பெருங்கடல் எமக்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகளை வழங்குகிறது.
இந்தக் கலந்தாய்வுகள் சீனா-சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதி மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கும் என்றும் சீனத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.
