பெலாரஸ் வெளியுறவு அமைச்சருடன் விஜித ஹேரத் பேச்சு
பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, பெலாரசும் சிறிலங்காவும், தங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஏற்கனவே உறுதியான பலன்களைத் தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“பெலாரசுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அண்மையில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெலாரஸ் நட்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் அதிகாரபூர்வ வருகையும் எமது சந்திப்பும், எமது உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் உங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன,” என்றும் பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்றும், இதில் இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும், அனைத்துலக தளங்களில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

