எண்ணெய் இறக்குமதிச் செலவு 6 மடங்கு அதிகரிப்பு
பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதி செலவு, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலரிலிருந்து மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது.மே மாத இறக்குமதி 522 மில்லியன் டொலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில், எண்ணெய் இறக்குமதி ஆறு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
ஒரு லிட்டர் டீசலின் உண்மையான விலை சுமார் ரூ. 720 ஆக இருக்கும் நிலையில், அது தொடர்ந்து நுகர்வோருக்கு ரூ. 392 விற்கு விற்கப்படுகிறது.
இதன் விளைவாக அரசாங்கமும் பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன.
அரசாங்கம் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ. 100 மானியம் செலுத்தினாலும், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லிட்டருக்கு ரூ. 492 மட்டுமே பெறுகிறது, இது செலவு மீட்பு அளவை விட கணிசமாகக் குறைவாகும்.
கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளால்பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 84 பில்லியன் இழப்புகள் ஏற்பட்டன.
எரிபொருள் விலை உயர்வால் மின்சாரக் கட்டணங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. மின்சாரக் கட்டணங்கள் 18% உயர்த்தப்பட்ட போதிலும், 95% க்கும் மேற்பட்ட நுகர்வோர் அதன் முழு தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சுமார் 5% பேர் மட்டுமே அதிக கட்டணங்களைச் சந்தித்துள்ளனர்.
இருப்பினும், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கா மின்சார சபை ஆகிய இரண்டிற்கும் திறைசேரி காலவரையின்றி மானியம் வழங்குவதை தொடர முடியாது.
உயர்ந்த விலையில் தற்போதைய நுகர்வு அளவுகளைத் தொடர்வது, டொலர் வெளியேற்றத்தை விரைவுபடுத்தி, பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
