மேலும்

பொது நிதிக்குழுவில் தகவல்களை வெளியிட மறுத்த திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு  குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களை வெளிப்படுத்துவது நடைபெற்று வரும் விசாரணைகளைப் பாதிக்கும் என்று அவர் கூறியதாக, பொது நிதிக்குழு உறுப்பினர்கள்  தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த மோசடி குறித்து பொது நிதிக்குழுவில் நேற்று முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை திறைசேரி செயலாளர் நிராகரித்திருந்தார்.

எனினும், திடீரென தமது முடிவை மாற்றிக் கொண்டு நேற்று பிற்பகல் பொது நிதிக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, திறைசேரி நிதி திருட்டு தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ,பொது நிதிக்குழுவின்,  ஆளும் கட்சியைச் சேர்ந்த சத்துரங்க அபேசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள்  எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்த நீண்ட கூட்டத்தின் போது, எந்தப் புதிய தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் இருந்ததால், மத்திய வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தச் சிறப்பு கூட்டம் முடிவடைந்த  பின்னர்,  பொது நிதிக் குழுவின் தலைவரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஊடகங்களிடம், தகவல் வெளியிட்ட போது,

“சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, ஒரு இணையவழித் திருட்டு நிகழ்ந்துள்ளது. காவல்துறையும் குற்றப் புலனாய்வுத் துறையும் இது குறித்து விசாரித்து, இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்.

இந்த இணையவழித் திருட்டு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக, திறைசேரி செயலாளர் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன்  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பத்து கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜனவரியில், இந்தக் கொடுப்பனவுகள் குறித்து சில சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நிதி அமைச்சினால் ஒரு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த பத்து கொடுப்பனவுகளில் ஒன்றுகூட சம்பந்தப்பட்ட தரப்பினரால் பெறப்படவில்லை என்பதும், சில முறைகேடுகள் நடந்துள்ளன என்பதும் மார்ச் மாதத்தில்தான் அதிகாரிகளுக்கு  தெரியவந்துள்ளது.

இன்றைய விசாரணைகளின் மூலம், இந்தக் கொடுப்பனவு நடைமுறைகளில் பெரும் ஓட்டைகள் உள்ளன என்றும், அவை எந்தச் சந்தர்ப்பத்திலும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இத்தகைய சந்தேகங்கள் இருந்த போதிலும், கொடுப்பனவுகள் ஏன் தொடரப்பட்டன என்பதே கேள்வி.

எதிர்காலத்தில் இது காவல்துறையினரால் நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று  தெரிவித்தார்.

அதேவேளை,  காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பாக, பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒ சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து, எதிர்க்கட்சிகள் கோரியபடி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் ஜயத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கையை ஆளும்தரப்பு நிராகரித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *