இரத்த வெள்ளத்தில் கிடந்த திறைசேரி அதிகாரி ராஜபக்ச – மரணத்தில் சந்தேகம்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி நிதி திருட்டு தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா நிஷாந்த ராஜபக்ச மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவிற்கு கடன் திருப்பிச் செலுத்தும் போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா நிஷாந்த ராஜபக்ச (50), நேற்று மர்மமான முறையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
கடன் திருப்பிச் செலுத்தும் போது, நிதி காணாமல் போனது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் தொடர்பாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐந்து அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
வீரம்புகெதரவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள தோட்டத்தில், நேற்று பிற்பகல் இரத்தக் காயங்களுடன் ராஜபக்சவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக, வடமேல் மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் இரு கால்களிலும் இடது கையிலும் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் வெட்டப்பட்டிருந்ததாகவும், கடுமையான இரத்தப் போக்கினார் அவர் இறந்திருக்கலாம் எனத் தோன்றுவதாகவும், சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
ஆசிரியையான மனைவி காலையில் வேலைக்குச் சென்ற பின்னர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜபக்ச, தனது மகளிடம் தோட்டத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், நீண்ட நேரத்திற்குப் பின்னரும் திரும்பாததால், தேடிச் சென்ற போது, அவரது உடல் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.
இந்த மரணம் தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என உறுதி செய்யப்படாத நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மினுர செனரத் தெரிவித்தார்.
இருப்பினும், முதற்கட்ட விசாரணைகள் இது ஒரு உயிர்மாய்ப்பு என்று சகாட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெறும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே, மரணத்திற்கான சரியான காரணம் தீர்மானிக்கப்படும் என்றும், அவர் கூறினார் .
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பரிமாற்ற மோசடிக்கு வழிவகுத்த மின்னஞ்சலை இவரே பெற்றதாகவும், அதைத் தொடர்ந்த பரிவர்த்தனைக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலட்சியம் மற்றும் கவனக்குறைவின் காரணமாக, ராஜபக்ச ஒரு மோசடி மின்னஞ்சலுக்குப் பதிலளித்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து அவருக்கு முன்னரே தெரிந்திருந்ததா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ராஜபக்ச பணி இடைநீக்கத்திற்கு முன்னர் ஒரு முறையும், பின்னர் இரண்டு முறையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும், மேலதிக விசாரணைக்காக அடுத்த வாரத் தொடக்கத்தில் அவரை மீண்டும் அழைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தயாராகி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் மரணம், முக்கியமான தகவல்களை மறைத்து விடும் என்பதால், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைப் பயன்படுத்தி விசாரணை தொடரும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
