திருடப்பட்ட பணம் எந்த கணக்கிற்கு மாற்றப்பட்டது?- நிதிப் புலனாய்வு பிரிவு விசாரணை
சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
‘சுதந்திர சட்டவாளர்கள் ’ (Free Lawyers) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, கடன் சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவுஸ்ரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை இணைய ஊடுருவிகள் திருடிவிட்டதாக நிதி அமைச்சு ஒப்புக்கொண்டது.
இதகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி போன்ற பல முகமைகளின் ஈடுபாட்டுடன், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறையும் விசாரணைக்கு உதவி வருகிறது.
திருடப்பட்ட பணம் எந்தக் கணக்கிற்குச் சென்றது என்பது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
உதவிக்கு அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை பிரதிநிதிகள் குழு இங்கு வருமா என்று கேட்டதற்கு, அத்தகைய தேவை இன்னும் எழவில்லை என்று அவர் கூறினார்.
“நாங்கள் இன்னும் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். தேவை ஏற்பட்டால், அவர்களை அழைப்போம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
