சிறிலங்கா அருகே ஈரானிய மசகு எண்ணெயுடன் சென்ற கப்பலை மடக்கியது அமெரிக்கா
ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே, அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.
அந்தக் கப்பலில் அமெரிக்கப் படைகள் ஏறியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன், இன்று அறிவித்துள்ளது.
சோதனையிடுவதற்கான உரிமையின் பேரில் அமெரிக்கப் படைகள் கடல்வழித் தடையை மேற்கொண்டதாகவும், எம்/டி ரிபானி ( M/T Tifani ) கப்பலில் “எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி” ஏறியதாகவும் பென்டகன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
தெஹ்ரானுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் அல்லது அதன் அரசாங்கத்திற்கு உதவக்கூடிய ஆயுதங்கள், எண்ணெய், உலோகங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களையும், தடுத்து நிறுத்தும், வகையில், அமெரிக்கா எடுத்துள்ள அண்மைய நடவடிக்கை இதுவாகும்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்தம் காலாவதியாவதற்கு, சில மணி நேரங்களுக்கு முன்னதாக, வொசிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பேச்சுக்களை முன்னெடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தக் கப்பல் இன்று இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவுக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே, எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டின.
பொட்ஸ்வானா கொடியுடன் காணப்பட்ட போதும், இந்தக் கப்பலை, “நாடற்றது” என்று பென்டகன் விபரித்துள்ளது.
இன்று கப்பல் எங்கு, எந்த நேரத்தில் அமெரிக்கப் படைகளால் தடுக்கப்பட்டது என்பதை அந்த அறிவிப்பு துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
அமெரிக்க முற்றுகையானது ஈரானிய கடல் பகுதிகளையும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்க்களத்தையும் தாண்டி விரிவடையும் என்று, அமெரிக்க கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், கடந்த வாரம், கூறியிருந்தார்.
“மற்ற பொறுப்புப் பகுதிகளில் உள்ள அமெரிக்கப் படைகள், ஈரானியக் கொடியுடன் வரும் எந்தவொரு கப்பலையும் அல்லது ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலையும் தீவிரமாகப் பின்தொடரும்” என்றும் பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவத்தால் இடைமறிக்கப்பட்ட அந்த மசகு எண்ணெய் கப்பல், இன்று அதிகாலை திடீரெனத் தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளதுடன், தற்போது சிறிலங்காவில் இருந்து சுமார் 700 கி.மீ (430 கடல் மைல்கள்) தென்கிழக்கில், தனது இருப்பிடத்தைக் காட்டி வருவதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மரைன் ட்ராபிக் (MarineTraffic) தரவுகளின்படி, ஏறக்குறைய 300,000 தொன்கள் எண்ணெயை ஏற்றக் கூடிய ரிபானி என்ற மசகு எண்ணெய் கப்பல், தற்போது சரக்கு ஏற்றப்பட்ட நிலையில் உள்ளது.
ஈரானுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட இந்தியக் கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடைய இந்தக் கப்பல், அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு பணியகத்தினால் (Office of Foreign Assets Control) தடை செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் நாள் வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த எண்ணெய் கப்பல் ஏப்ரல் 18 ஆம் நாள், சிறிலங்காவின் காலி துறைமுகத்திற்கு அருகே காணப்பட்டது.
முன்னதாக, அது ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரை சென்றடையும் என்று மரைன் டிராபிக் தெரிவித்துள்ளது.

