மேலும்

கைது, தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான  தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக, அவசர தலையீட்டைக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை  நாடியுள்ளார்.

அவர் தனது சட்டவாளர்கள் மூலம் தாக்கல் செய்துள்ள ஒரு நீதிப்பேராணை (ரிட்) மனுவில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை இடைநிறுத்தம் செய்யும் இடைக்கால நிவாரணத்தையும், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும்  உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

இந்த மனுவில், காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு கோட்டை நீதிவான் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

சனல் 4 ஒளிபரப்பிய ஒரு ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2024 ஒக்டோபர் 4 ஆம் நாள், அருட்தந்தை ரோகன் டி சில்வா  குற்றப் புலனாய்வுத்துறையிடம்  செய்த  முறைப்பாட்டின்அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆவணப்படத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சாலேவுக்கு தொடர்பு இருப்பதாக  அஸாத் மௌலானா  குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சுரேஷ் சாலே, குறித்த காலகட்டங்களில் தான் சிறிலங்காவில் இல்லை என்றும், எனவே சஹ்ரான் காசிம் அல்லது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைய நபர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில்  ஆலோசகராகப் பணியாற்றியதாகவும், அதன்பின்னர் புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் 59வது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறிக்காக 2019  ஜனவரி 7 முதல் நவம்பர் 29ஆம் நாள் வரை இந்தியாவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தான் இந்தியாவில் இருந்த நேரத்தில் நிகழ்ந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *