ஐ.நாவைக் குற்றம்சாட்டுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.
தடயவியல் அதிகாரிகளை வழங்குமாறு ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாக தடயவியல் அதிகாரிகளுக்காக நிறுவனம் கோரிக்கைகளை அனுப்பிய போதும், அது இன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது என காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் மகேஷ் கதுலண்டா, தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கான பணியகத்தின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டை ஐ.நா. செய்துள்ளது, ஆனாலும் அவர்கள் எங்களுக்கு ஒரு தன்னார்வலரைக் கூட வழங்கவில்லை.
வேறு சில அமைப்புகளும் தேவைகள் குறித்த மதிப்பீடுகளைச் செய்து, எங்களுக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனாலும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் இன்றுவரை பரிசீலிக்கப்படவில்லை.
நான் இந்த பணியகத்தில் இருந்த நான்கு ஆண்டுகளில், எந்தவொரு நாடோ அல்லது அனைத்துலக அமைப்போ இந்தச் செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க அல்லது அளவிடக்கூடிய ஆதரவை எங்களுக்கு வழங்கவில்லை.
ஆனாலும், பல்வேறு அமைப்புகள் எங்களிடம் அறிக்கைகளைக் கேட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக அரசாங்கங்கள் காணாமல் போனோருக்கான பணியகத்தின் சுதந்திரத்தில் தலையிடாமல் அதன் செயல்பாடுகளை ஆதரித்து வந்துள்ளன.
எனவே இந்தப் பணியகம் அதன் செயல்பாடுகளில் எந்தவொரு வெளிப்புறத் தலையீட்டையும் நிராகரிக்கிறது என்றும், ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
