சிறிலங்கா இராணுவத்திற்கு ட்ரோன்களை வழங்க துருக்கியே விருப்பம்
சிறிலங்காவுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்களை விற்பனை செய்ய துருக்கியே முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும் துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் (Semih Lutfu Turgut) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்கு துருக்கியே திட்டமிட்டு வருகிறது.
துருக்கியேவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக, ஒரு தொழில்நுட்பக் குழு விரைவில் சிறிலங்காவிற்கு வரும்.
அதன்பின்னர், சிறிலங்காவில் இருந்து ஒரு குழு துருக்கியேவிற்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும்.
கண்காணிப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் இராணுவ ட்ரோன்களை வழங்குவதற்கே துருக்கியே முன்வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
