ஈரானிய கப்பல்களுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை
ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், சிறிலங்கா கடற்படைத் தளபதி விடுத்த கனிவான மற்றும் வாய்மொழி அழைப்பைத் தவிர, ஈரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா சிறிலங்கா வருகை தருவதற்கு எந்தவொரு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பும் விடுக்கப்படவில்லை.
கடற்படைத் தளபதி விடுத்த அழைப்பு என்பது பொதுவாக, கடற்படைத் தளபதிகளால் விடுக்கப்படும் ஒரு வழக்கமான அழைப்புதான்.
இதுபோன்ற அழைப்புகள் எந்தவொரு நாட்டினாலும், நிகழ்வுகளில் விடுக்கப்படுகின்றன.
இத்தகைய நிகழ்வுகளில் வாய்மொழியாக விடுக்கப்படும் அழைப்புகளுக்கு இராஜதந்திர ரீதியாக எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்.என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஈரானிய தூதுவரின் கருத்து குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், தேவைப்பட்டால் வெளியுறவு அமைச்சு பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார்.
சிறிலங்கா ஒரு நடுநிலை நாடாக செயல்படுகிறது.நடுநிலைமையைக் கடைப்பிடித்து, சாத்தியமான அனைத்தையும் நாங்கள் செய்வோம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
