அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகளும் சிறிலங்காவுக்கு புறப்பட்டன
சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த உலங்குவானூர்திகள் கடந்த 15ஆம் நாள், அலபாமாவின் போர்ட் மொபைல் துறைமுகத்தில் இருந்து, கப்பலில் புறப்பட்டுள்ளன. இவை மே 24 ஆம் நாள் சிறிலங்காவை வந்தடையும் என வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
பெல் 206B-3 ஜெட் ரேஞ்சர் உலங்குவானூர்தியின் இராணுவ வகையான TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள், விமானிகளுக்கான பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்கு உதவும்.
இந்த உலங்குவானூர்திகள், குறிப்பாக அவசரகாலச் சூழல்கள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் சிறிலங்காவின் விரைவான பதிலளிப்புத் திறன்களைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்தக் கொடை பிரதிபலிக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம், தெரிவித்துள்ளது.
