மேலும்

சிறிலங்கா படைகளை நவீனமயப்படுத்த அதிபர் அனுர உத்தரவு

சிறிலங்கா ஆயுதப் படைகள் உலகின்  மிகச் சிறந்த தொழில்முறைப் படைகளில் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்கு, தேவையான பயிற்சி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவைப்படும் வரைவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் முறையாகச் செலவிடப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றுக் காலை அதிபர் செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் முதற்கட்ட வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் குறித்த கலந்துரையாடலில்,  பங்கேற்றபோதே அனுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் கேடட் அதிகாரிகளுக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களும் ஆராயப்பட்டன.

அத்துடன் சிறிலங்கா படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இத்தகைய பயிற்சி ஏனைய அரசுத் துறைகளின் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதை விட வேறுபட்டது என்றும்,  இந்த விடயத்தில் குறிப்பாக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு  அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் அதே இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா  அதிபர் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, சிறிலங்கா அதிபரின் செயலாளர்  நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ். சம்பத் துயகொந்த , முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *