சிறிலங்கா அதிபர் தலைமையிலேயே நாளை போர் வெற்றி விழா
16 ஆவது போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்கவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் சேனாரத் கொஹன்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை, கோட்டே ஜயவர்த்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னம் முன்பாக இடம்பெறவுள்ளது.
இதில் சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி என்ற வகையில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமை தாங்குவார் என்றும், பிரிகேடியர் சேனாரத் கொஹன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர்வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இம்முறை தேசிய போர் வீரர்கள் நினைவு நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபரும் பிரதமரும் நாளைய நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியிருந்தார்.