தாயகம் எங்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, இன அழிப்பை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படையினர் முன்னெடுத்த இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், நேற்று முதல், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
நேற்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக விசேட பிரார்த்தனையும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கமும், தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போதும், முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, வழங்கப்பட்டது.
மட்டக்களப்பில், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபியில் நேற்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் போது, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு, முள்ளியவளை சந்தியம்மன் ஆலயம் முன்பாக இன்று முற்பகல், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால், கிளிநொச்சி சந்தையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடம், மன்னார் – பள்ளிமுனை பெருக்கமரத்தடி, மட்டக்களப்பு காந்தி பூங்கா, வவுனியா- இலுப்பையடி, கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடி உள்ளிட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைப் பகுதியிலும், முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுளை நினைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியிலும் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதான அஞ்சலகத்துக்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், கைதடியில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.