சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாரில்லை
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா கவலை வெளியிட்டுள்ளார்.
வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுகிறது.
ஜப்பானுடன் ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றை செய்து கொள்வதற்கு சிறிலங்கா திட்டமிட்டால், ஜப்பானில் இருந்து வரும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது குறித்து கலந்துரையாடப்பட வேண்டும்.
ஆயினும் சிறிலங்காவுடன், சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு ஜப்பான் தயாராக இல்லை.
பெயருக்காகவோ, உணர்வுபூர்வமான மதிப்புக்காகவோ அதனைச் செய்து கொள்ள வேண்டியதில்லை.
சிறிலங்கா அத்தகைய வர்த்தக உடன்பாட்டுக்கான எந்த முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை.
இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு, பரஸ்பர நன்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
மாறாக, அரசியல், குறியீட்டு காரணங்களுக்காக அது அவசியமற்றது. என்றும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடந்த கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
