ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தி
பெரும்பான்மை பலத்தைப் பெறாத உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்ற, தேசிய மக்கள் சக்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 100இற்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில், தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இவற்றில் தேசிய மக்கள் சக்தி அல்லது ஏனைய கட்சிகள் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இவ்வாறான சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகள், குழுக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக குதிரை பேரங்களில் அந்தக் கட்சி ஈடுபடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பிற கட்சிகள் குழுக்களின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, தேசிய மக்கள் சக்தி முறையற்ற வகையில் பேரம் பேசுவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு 25 இலட்சம் ரூபா வரை பேரம் பேசப்படுவதாக தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் தவறான வழிமுறை என்று பிரசாரம் செய்த விடயங்களையே தேசிய மக்கள் சக்தி இப்போது செய்வதாக, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
