சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான்
சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த வட்டமேசை விவாதத்தின் போது,எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, ஜப்பானிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா பல வழிகளில் ஜப்பானுக்கு மிக முக்கியமான பங்காளியாகும்.
சர்வதேச நாணய நிதிய உடன்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்பாடு மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் மீண்டும் பழைய பாதைக்கு திரும்பி வருகின்ற போதும், இந்த கட்டத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்ய உடனடியாக வரும் என்று நான் நினைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் கடன் மறுசீரமைப்பை முடித்து விட்டதால், புதிய கடன் திட்டங்களை மேற்கொள்ள ஜப்பான் தயாராக உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜப்பானிய தூதுவர், சிறிலங்கா தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிக்க ஜப்பான் தயாராக உள்ளது, இருப்பினும், அது சிறிலங்காவின் கடன் சேவை திறனைப் பொறுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, “சிறிலங்காவில் முதலீடுகளைப் பெறுவதில் சில ஜப்பானிய நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக செய்திகள் வந்துள்ளன.
ஜப்பானிய நிறுவனங்கள் இணக்கக் கடமைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றன. ஒருபோதும் இலஞ்சம் வழங்குவதில்லை.
இந்தியப் பெருங்கடலில் மூலோபாய அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவின் வளர்ச்சிவடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,
ஆனால் நியாயமான, நம்பகமான, வெளிப்படையான வணிகச் சூழலை உருவாக்குவதில் சிறிலங்கா முன்னேற்றமடைய வேண்டும் என்று முன்னாள் ஜப்பானிய தூதர் மிசுகோஷி ஹிடேகி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
