மேலும்

இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மீள்ஒழுங்கு செய்யவுள்ளதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், தனது இலக்குகள் தொடர்பாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா இராணுவத்தின் நற்பெயரும் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும். இது உலகின் எந்தவொரு படைகளுக்கும் இரண்டாவதாக இல்லை.

இராணுவ புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைப்பதுடன், அனைத்துலக படைகளின் உத்திகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது எனது எண்ணம்.

தொடர் பயிற்சிகள், அனுபவம்மிக்க திறமையான இராணுவத்தை உருவாக்கும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள உதவும்.

நவீன மற்றும் உலகளாவிய தரத்துடன், தொழில்நுட்ப அறிவைக் கொண்டவர்களாக இராணுவத்தினரை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதே எனது நோக்கம்.

உலகின் எந்தவொரு இராணுவமும், நாட்டின் குடிமக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக வாழ்க்கை முறைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளன.

அதேவேளை உள் அல்லது வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் உறுதியுடன் கடைப்பிடிக்க எச்சரிக்கையாக இருக்கும்.

கடந்தகால போர் நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா இராணுவம் அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மற்றும் உரிமைகளுக்கு அமையவே செயற்பட்டது. அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *