மேலும்

10 கட்சிகளுடன் ‘மொட்டு’ கூட்டணி உடன்பாடு – கோத்தா பங்கேற்கவில்லை

பத்து சிறிய அரசியல் கட்சிகளுடன், கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கையெழுத்திட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் செயலரும், அதனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய, ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்கா மகா சபை, பூமிபுத்ர கட்சி ஆகிய பத்து கட்சிகளே பொதுஜன பெரமுனவுடன் இன்று கூட்டணி உடன்பாடு செய்துள்ளன.

இந்தக் கட்சிகள் முன்னர் கூட்டு எதிரணியில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும், நாடாளுமன்றத்தில் ஆசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டே பொதுஜன பெரமுன இந்த கூட்டணியை அமைத்துள்ளது.

இதில், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

எனினும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவோ, கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *