நீதித்துறை அதிகாரிகள் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்புக்கு தடை
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் உடன், தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகளை அடுத்தே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், 2011இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் றொசான் சானக கொலை செய்யப்பட்டமை, மற்றும் 2012 இல் நிகழ்ந்த ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என மகிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
ஐ.நா அறிக்கையாளர் நீதித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவது, நீதித்துறையில் தலையீடு செய்யும் முயற்சி என்றும், இந்தச் சந்திப்பை நடக்காமல் தடுக்குமாறும், அவர் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, நீதி அதிகாரமற்ற நபர் ஒருவர் நீதித்துறையில் தலையீடு செய்ய அனுமதிப்பது, அரசியலமைப்பின் 111 சி முதலாவது பிரிவை மீறும் செயல் என தினேஸ் குணவர்த்தனவும் சுட்டிக்காட்டினார்.
நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் தலைமை நீதியரசர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளை, ஐ.நா அறிக்கையாளருடனான சந்திப்புக்கு ஒழுங்கு செய்யுமாறு நீதி அமைச்சின் செயலரிடம், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட், கோரியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான சந்திப்புக்கு அமைச்சர்களும், செயலர்களும் அனுமதிப்பது, நீதிமன்ற அவமதிப்பாக இருக்கும் என்றும், அவ்வாறு சந்திப்புக்கு ஒழுங்கு செய்யும் அமைச்சர்கள், செயலர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜேதாச ராஜபக்ச எச்சரித்தார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலரை நாடாளுமன்றத்துக்கு அழைக்க வேண்டும் என்றும், சந்திப்புக்கு ஒழுங்கு செய்யுமாறு நீதி அமைச்சின் செயலருக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தை அடுத்து, ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை, தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஒழுங்குகளை நிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் அறிவித்தார்.