மேலும்

ஐ.நா, மேற்குலக அழுத்தங்களால் அடுத்தவாரம் நாடாளுமன்றைக் கூட்ட ஆலோசனை

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஐ.நா மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, புதிய அமைச்சரவையையும் சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளதை அடுத்து, சிறிலங்கா அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்னமும் மகிந்த ராஜபக்சவின் நியமனத்தை – சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்ளாத சீனா தவிர்ந்த அனைத்துலக சமூகம், உடனடியாக நாடாளுமன்றத்தை மீளக் கூட்டி, சிக்கலைத் தீர்க்குமாறு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, ஹனா சிங்கர், சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், சிறிலங்கா அதிபர் விளக்கிக் கூறியதாகவும், அரசியலமைப்புக்கமையவே எல்லா நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா தூதுவருக்கு உறுதியளித்தார் என்றும் அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் சாத்தியமான உதவிகளை ஐ.நா தொடர்ந்து வழங்கும் என்று ஹனா சிங்கர் உறுதியளித்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுத்த ஐ.நா

சிறிலங்கா அதிபருடனான இன்றைய சந்திப்பு தொடர்பாக, கொழும்பில் உள்ள ஐ.நா செயலகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரை இன்று சந்தித்த ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர், சிறிலங்காவின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார் என்றும், ஜனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை அவர் கோருகிறார் என்றும் வலியுறுத்திக் கூறினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா முக்கியமான நகர்வுகளை எடுக்க வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றங்கள் எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய ஐ.நா தூதுவர், இது தொடர்பாக சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைக்க ஐ.நா தயாராக இருப்பதாகவும், கூறியுள்ளார்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனையும் சந்தித்த ஐ.நா தூதுவர்

சிறிலங்கா அதிபரை இன்று காலை சந்தித்த பின்னர், ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பாக, கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குலக தூதுவர்கள் சபாநாயகரை சந்திப்பு

சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், சிறிலங்காவுக்கான ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர் உள்ளிட்ட, மேற்குலக இராஜதந்திரிகள் குழுவொன்று இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்ப நிலை குறித்து ஆராயப்பட்ட இந்தச் சந்திப்பின் போது, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில்,ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிறிலங்கா தொடர்பான அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று மேற்குலக இராஜதந்திரிகளிடம், சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகரை அவசரமாகச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர், மற்றும் சபாநாயகருக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியதை அடுத்து, இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதிபர் செயலகத்தில் இன்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தை அடுத்தவாரம் கூட்ட ஆலோசனை

இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து ஆலோசிப்பதாக, சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார் என்று சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள்  தகவல் வெளியிட்டுள்ளன.

வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான சாத்தியங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் ஆலோசித்து வருவதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *