மேலும்

ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை, உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதை அடுத்து, மாலியில் பணியாற்றும் ஐ.நா அமைதிப்படையிலுள்ள சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை உடனடியாக திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு நேற்றுமுன்தினம் ஐ.நா செயலகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்திடம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சிறிலங்கா இராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,

“மாலியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியை திருப்பி அழைக்குமாறு ஐ.நா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக் கொள்கிறது. ஐ.நாவின் கோரிக்கைக்கு சிறிலங்கா இராணுவம் மதிப்பளிக்கிறது.

எனினும், இந்த முடிவை மீளாய்வு செய்ய கோரப்படும். அத்துடன், லெப்.கேணல்  மீதான குற்றச்சாட்டுகள்  நீக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் கோருவோம்.

அதேவேளை, குற்றம்சாட்டப்படுவது போன்று, லெப்கேணல் அமுனுபுர, மனித உரிமை மீறல்களில் தொடர்புபட்டிருக்கவில்லை. இது குற்றச்சாட்டுகளாக இருக்கலாம். ஆனால், அவர் தவறாக எதையும் செய்து விடவில்லை. எந்தப் போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத்துக்கு இன்னமும், ஐ.நாவின் அதிகாரபூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லை.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்படும் அனைத்துப் படையினரதும் பின்னணிகள், ஆராயப்படுகின்றன. லெப்.கேணல் அமுனுபுர கடந்த டிசெம்பரில் புறப்பட முன்னர் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.” என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, மாலியில் இருந்து லெப்.கேணல் கலன அமுனுபுரவை சிறிலங்காவுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவரை சொந்த செலவிலேயே சிறிலங்கா அரசாங்கம் திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா கூறியுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *