மேலும்

ஆய்வுக்கான பட்டியலில் லெப்.கேணல் பெயர் இருக்கவில்லை – தீபிகா உடகம

மாலிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா படையினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

மாலியில் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஐ.நா அமைதிப்படைக்குத் தெரிவு செய்யப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு இணங்கியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது எமது ஆணைக்குழு ஊடாக நடக்கவில்லை.

மாலிக்கு அனுப்புவதற்கான சிறிலங்கா இராணுவ அணி  2017ஆம் ஆண்டு தொடக்கத்தில், முதலில் மீளாய்வுக்காக வந்தது.

நாங்கள் எமது ஆய்வுகளின் ஊடாக சிலருக்கு அனுமதி அளித்தோம். சிலர் தொடர்பாக மேலதிக தகவல்களைக் கோரினோம்.

அப்போது  ஐ.நா ஏற்கனவே இந்த அணியை ஆய்வுக்குட்படுத்தி விட்டதாகவும், உங்களின் சேவை எமக்குத் தேவையில்லை என்றும் இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா  கடிதம் அனுப்பினார்.

எனவே நாங்கள் ஒட்டுமொத்த இராணுவ அணியையும் ஆய்வுக்குட்படுத்துவதை நிறுத்தினோம். ஐ.நாவும் சிறிலங்கா இராணுவமுமே அதனைக் கையாண்டன.

திருப்பி அனுப்புதல் தொடர்பான நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா விதிவிடப் பிரதிநிதி சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்திய போது, விபரங்களை பரிசோதித்தோம்.

அப்போது, லெப்.கேணல் அனுமபுரவின் பெயர், ஆணைக்குழுவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட மூலப் பட்டியலில் இருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

இது சிறிலங்கா இராணுவத்துக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான விவகாரம்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *