இந்தியப் பெருங்கடல் மாநாடு அலரி மாளிகையில் ஆரம்பம்
‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளில் மூன்று நாள் மாநாடு, அலரி மாளிகையில் உள்ள சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்களும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதிச் செயலர் அலிஸ் வெல்ஸ், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்தியப் பெருங்கடலை அண்டிய நாடுகள் மற்றும் அதனைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கான தளம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், பூகோள ரீதியாக பொதுவானதொரு சொத்தாகத் திகழும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்குமான சமத்துவத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய, சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் பெருங்கடல் விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி ஷியான்லியாங், இந்தியப் பெருங்கடல், கடல் வழிப் பாதையில் செயற்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நவீன சவால்களாக உருவாகி வரும் விடயங்கள் தொடர்பில் கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.