மேலும்

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா – சிறிலங்கா அதிபர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.

இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு சபை இவரது நியமனத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், சிறிலங்காவின் 46 ஆவது தலைமை நீதியரசர் இன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதனை அங்கீகரிப்பதற்கான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இழுபறிகள் காணப்பட்டன.

அரசியலமைப்பு சபைக்கான, உறுப்பினர்களாக, அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச, பிமல் ரத்நாயக்க, ஜெயந்த தனபால, ஜாவிட் யூசுப், என்.செல்வக்குமரன் ஆகியோர் மூன்றாண்டு பதவிக்காலத்துக்காக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்த நெருக்கடி தீர்ந்துள்ளது.

இந்தநிலையில், உச்சநீதிமன்ற நீதியரசரான, நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சபைக்கு நேற்று முன்மொழிந்துள்ளார்.

இவர், 10 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்களில், மூப்பு வரிசையில், ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

2016ஆம் ஆண்டு இவரை உச்சநீதிமன்ற நீதியரசராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே நியமித்திருந்தார்.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர், தலைமை நீதியரசராக, பொறுப்பேற்கும் முதலாவது தொழில்சார் நீதியரசராக இவரே இருப்பார்.

நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக உயர்பதவிக்கு கடைசியாக நியமிக்கப்பட்டவர், நீதியரசர் பரிந்த ரணசிங்க ஆவார்.

அதற்குப் பின்னர், நளின் பெரேராவே, நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள, சிறிலங்கா பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய 7 புதிய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபை புதிய தலைமை நீதியரசரின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *