சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரிக்கு சேவை நீடிப்பு – உயர் அதிகாரிகள் மத்தியில் குழப்பம்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவத் தலைமை அதிகாரி மற்றும் பிரதி தலைமை அதிகாரி பதவியில் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்திருந்த மேஜர் ஜெனரல்கள் மத்தியிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, ஓய்வுபெறாததால், பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழக்கும் அல்லது பதவி உயர்வு தாமதமடையக் கூடிய மேஜர் ஜெனரல்களே குழப்பமடைந்துள்ளனர்.
பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுக்கு மாத்திரமே, சேவை நீடிப்பு வழங்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பை இழக்கும் ஏனைய மூத்த அதிகாரிகள் ஓய்வுபெற்றுக் செல்ல வேண்டும்.
அண்மைக்கால வரலாற்றில், இராணுவத் தளபதியாக இல்லாத ஒரு அதிகாரிருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட ஒரே ஒரு நிகழ்வு இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு, யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரிசிறிக்கு , சேவை நீடிப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பமே அதுவாகும். சேவை நீடிப்புக்குப் பின்னர், அவர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, 2019 ஓகஸ்ட் 19 வரை சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.