இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கடற்படையுடன் ஜப்பான் கூட்டுப் பயிற்சி
இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய கடற்படை, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டுப் பயிற்சி ஒன்றை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக, ஜப்பானின் ஜிஜி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தும், நோக்குடன் ஜப்பான் இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்கிறது.
அத்துடன் பிராந்தியத்தில் சீனாவின் கடல்சார் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில், வெளிப்படையாக சீனாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கும் நோக்கம் ஜப்பானுக்கு இருக்கிறது என்றும், இதனுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது, ஜப்பானிய கடற்படையின் நாசகாரி மற்றும் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான ககாவில் இருந்து எவ்வாறு மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது, என்று சிறிலங்கா கடற்படை அதிகாரிகள், பயிற்சி பெறவுள்ளனர்.
ஜப்பானிய கடற்படையின் பயிற்சிகளையும் அவர்கள் அவதானிக்கவுள்ளனர்.
“கடலில் ஒரு பயிற்சியின் போது, தமது எந்தவொரு கப்பலிலும், ஏனைய நாடு ஒன்றின் அதிகாரிகளை ஜப்பானிய கடற்படை ஏறுவதற்கு அனுமதிப்பது அரிதான ஒன்று” என, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் கடல்சார் அதிகாரிகள் பணியகத்தின், பொதுசன தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையுடனான பயிற்சிகளின் போது, கருத்து வெளியிட்ட ஜப்பானிய கடற்படை அதிகாரி ஒருவர், “நாங்கள் குறிப்பிட்ட எந்த நாட்டையும் மனதில் வைத்துக் கொண்டு, எதையும் செய்யவில்லை. இது இந்தோ- பசுபிக் மூலோபாயத்தின் ஒரு அங்கம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் கடல்சார் தளங்களை சீனா உருவாக்க முயற்சிக்கும் நிலையில், சிறிலங்காவுடனான தமது உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் ஜப்பான் செயற்படுகிறது என நம்பப்படுவதாகவும், ஜிஜி பிரஸ் ஊடகம் செய்தியில் கூறப்பட்டுள்ளது.