மைத்திரி – மகிந்த இரகசியச் சந்திப்பு?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரும் இதில் பங்கேற்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பான வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சதித் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்குத் தெரியாத பல விடயங்களை, மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகி, கூட்டு எதிரணியுடன் இணைந்து மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள சூழலிலேயே இந்த இரகசியச் சந்திப்பு பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.
எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடந்தது என்ற விபரங்கள் ஏதும், வெளியாகவில்லை.