சிறிலங்காவை சீனா கடன்பொறியில் தள்ளவில்லை – கருணாசேன கொடிதுவக்கு
நிதியை வழங்கி சீன அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் CGTN ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“சீன அரசாங்கம் எமக்கு நிதியை வழங்கி, சிறிலங்காவைக் கடன் பொறிக்குள் தள்ளியது என்று, யாராவது கூறுவார்களாயின், அந்தக் கருத்துடன் நான் இணங்கமாட்டேன்.அது நிச்சயமாக தவறான முடிவு.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு சீன அரசாங்கம் உதவியுள்ளது. சாத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அதற்கான முடிவை சிறிலங்கா அரசாங்கமே எடுத்தது.
நிச்சயமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நாங்கள் சிக்கலை எதிர்கொள்கிறோம். எவ்வாறாயினும், சீன அரசாங்கம், துறைமுகத்தைத் தம்மிடம் தருமாறு கேட்கவில்லை.
அந்த யோசனை சிறிலங்காவிடம் இருந்தே முன்வைக்கப்பட்டது. பங்குடமை அடிப்படையில் செயற்படுவது பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ மயப்படுத்துகிறது என்ற ஊடகங்களின் குற்றச்சாட்டு பொய்யானது.
இது தனியே பொருளாதார முயற்சி மாத்திரம் தான் என்று, ஆரம்பத்திலேயே நாங்கள் சீன தரப்பிடம் தெளிவாக கூறியிருந்தோம்.
சிறிலங்காவின் பாதுகாப்பு விடயங்களில் யாரையும் தலையீடு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எமது கடற்படைத் தளத்தை மாற்றுவதற்கு, கடந்த ஜூலை மாதமே முடிவு செய்திருக்கிறோம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாடு என்பன ஒட்டுமொத்தமாக சிறிலங்கா ஆயுதப்படைகள் கவலைப்பட வேண்டிய விடயங்கள்.
இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்க சீனா ஒருபோதும் கேட்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.