மேலும்

வடக்கில் ‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்க் கட்சிகள் போட்டி

local-election results (2)அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், இங்கு ஆட்சியமைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிவில் சமூகத்தினால் எடுத்துக் கூறப்பட்டது.

ஆனாலும், ஆரம்பத்தில் இதற்கு சாதகமான கருத்தை வெளிப்படுத்திய கட்சிகள் தற்போது முரண்பட ஆரம்பித்துள்ளன.

தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஒன்றில் ஈபிடிபியும், இரண்டில் தமிழ் காங்கிரசும், ஏனையவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை வென்றுள்ளன.

அதிக ஆசனங்களை வென்ற கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று உள்ளூர் பிரமுகர்கள் கோரிய போதிலும், அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டு, கட்சிகள் போட்டியில் குதிக்கத் தொடங்கியுள்ளன.

யாழ்ப்பாண மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் ஆர்னோல்டுக்கு எதிராக தாமும் மணிவண்ணனை நிறுத்தப் போவதாகவும், இரகசிய வாக்கெடுப்பு நடத்த கூட்டமைப்பு தயாரா என்றும் சவால் விடுத்திருந்தார் தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார்.

ஆனால் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாழ். மாநகர சபையில் பெரும்பான்மை பலத்தை திரட்டுவதற்காக, இரகசிய பேரங்கள் இடம்பெறுவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, யாழ். மாநகரசபையில் மாத்திரமன்றி தாம் பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ள சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளிலும், நல்லூர், கரவெட்டி பிரதேசசபைகளிலும் ஆட்சியமைக்க தமது கட்சி முயற்சிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பதை அடுத்து, நிலைமைகள் மேலும் சிக்கலாகியுள்ளன.

ஏட்டிக்குப் போட்டியாக இந்த சபைகளின் அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளதால், சுயேட்சைக் குழுக்களைத் தமது பக்கம் இழுக்கும் முயற்சிகளில் கூட்டமைப்பு இறங்கியுள்ளது.

வல்வெட்டித்துறை, நல்லூர், வலி. கிழக்கு பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சுயேட்சைக்குழுக்களுடன் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தி வருகிறது.

அதேவேளை, ஈபிடிபி  6 ஆசனங்களை வென்றுள்ள நெடுந்தீவு  பிரதேச சபையிலும், 2 ஆசனங்களை வென்ற சுயேட்சைக் குழுவுடன் இணைந்து 4 ஆசனங்களை வென்ற கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, அரசியல் கட்சிகள் போட்டியில் குதித்துள்ளதால், கட்சி தாவல்கள், குதிரை பேரங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்தச் சூழலில், தொங்கு நிலையிலுள்ள சபைகளின் அமர்வுகள் குழப்பத்துடனேயே ஆரம்பிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் இந்த சபைகளின் எதிர்காலம், அபிவிருத்தி என்பன கேள்விக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *