மேலும்

பலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும் தமிழர்கள்

join-tamils-armyசிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர்.

வலி.வடக்கில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பலாலி பெருந்தளப் பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் ஏற்கனவே விவசாய முயற்சிகள் மற்றும் கால்நடைப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் வளம்மிக்க விவசாய நிலங்களில் சிறிலங்கா படையினர் விவசாய, மற்றும் பண்ணைத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு பாரிய தென்னந்தோட்டம் ஒன்றை உருவாக்கும் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது.

கடந்தவாரம் பலாலி பெருந்தளப் பகுதியில் பொதுமக்களின் காணிகளில், 8000 தென்னங்கன்றுகள் சிறிலங்கா இராணுவத்தினரால் நாட்டப்பட்டுள்ளன.

இந்த தென்னந்தோட்டத்தைக் கொண்ட இராணுவப் பண்ணையில் பணியாற்றுவதற்காக, முன்னாள் போராளிகள் உள்ளிட்ட 50 தமிழ் இளைஞர், யுவதிகளை சிறிலங்கா படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

join-tamils-army

இராணுவ கடமையல்லாத, பண்ணைக் கூலிகள் போன்ற பணிகளில் ஈடுபடுவதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள 50 தமிழ், இளைஞர் யுவதிகளுக்கும், 40 ஆயிரம் ரூபா ஊதியம் மற்றும் ஏனைய சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழர் நிலங்களில் வணிக முயற்சிகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் அனைத்துலக சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில் தமது ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளில் சிறிலங்கா படையினர் தன்னிச்சையாக புதிதாக தென்னந்தோட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *