மேலும்

சிறிலங்காவுக்குள் நடப்பதை அமெரிக்கா வெளிக்கொணர வேண்டும்

USA-SriLanka-Flagபெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா இராணுவத்துடனான உறவை அமெரிக்கா மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கைகளில், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் வேறு பல இணைச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய திறன்களை சிறிலங்கா இராணுவத்தினருக்கு கட்டியெழுப்புதலும் ஒன்றாகும்’ என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல்களையும் போருக்குப் பின்னான காலப்பகுதியிலும் பல்வேறு மீறல் சம்பவங்களை மேற்கொண்டதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவானது சிறிலங்காவுடன் ஏற்படுத்தியுள்ள உறவானது மிகவும் ஆபத்தான தவறாகும்.

நான் முன்னர் வாதிட்டது போன்று, இலங்கைத் தீவிலுள்ள இராணுவத்துடன் அமெரிக்கா தனது உறவை மேலும் பலப்படுத்துவதற்கு முன்னர் இது தொடர்பாக மீளச்சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. ‘சிறிலங்கா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்படுவதானது மிகவும் மோசமான எண்ணமாகும்.

ஏனெனில் இவ்வாறான செயற்பாடானது சிறிலங்காவில் ஒருபோதும் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தம் ஏற்படப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள் தற்போதும் தொடர்வது மிகப் பெரியதொரு பிரச்சினையாக உள்ளதாக அண்மையில் அசோசியேட்டட் பிரஸ் ஊடகத்தால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரே ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றதானது பூகோள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு ஒரு சவாலாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டது. இருப்பினும் மனித சுதந்திரம் மற்றும் பன்முகவாத விழுமியங்களின் முக்கியத்துவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டாக மீளவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சிறிலங்காவுடன் அதனால் இழைக்கப்பட்ட மீறல்களை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் முற்றிலும் புறக்கணித்துள்ளார். இவ்வாறான குற்றங்களைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, தூதுவர் அமெரிக்க-சிறிலங்கா உறவு முன்னேறியுள்ளமை தொடர்பாக புகழ்ந்துரைத்துள்ளார்.

ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றபோது, இவர் நாட்டில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவார் என மக்கள் நம்பினர். சிறிசேன ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.

சிறிலங்காவில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் பெரியளவில் சீர்திருத்தங்கள் இடம்பெறவில்லை. ஆகவே புதிய சிறிலங்கா அரசாங்கமானது கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட மீறல்களையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் நினைவுபடுத்த வேண்டும். ஆகவே சிறிலங்காவிற்குள்ளே உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அமெரிக்க அதிகாரிகள்  வெளிக்கொண்டு வர வேண்டும்.

ஆங்கிலத்தில் – Taylor Dibbert
ழி மூலம்      – The diplomat
மொழியாக்கம்- நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *