மேலும்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு – மாணவிகளின் மடிக்கணினி நடனத்துக்குத் தடை

laptop danceசிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் இன்று, ‘ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர நாள் நிகழ்வுகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வர்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசியக் கொடியை ஏற்றி வைத்து இன்று காலை 9.13 மணியளவில் உரையாற்றுவார்.

அத்துடன், சிறிலங்காவின் முப்படைகள், காவல்துறையினரின் பாரிய அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொள்வார்.

இம்முறை 3600 சிறிலங்கா இராணுவத்தினர், 1249 சிறிலங்கா கடற்படையினர், 830 சிறிலங்கா விமானப்படையினர், 800 காவல்துறையினர், 505 சிவில் பாதுகாப்புப் படையினர், 100 கடெற் படையினர் அணிவகுப்பில், போராயுதங்கள், போர்த்தளபாடங்களுடன் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், இந்த அணிவகுப்பில் 550 நடன மற்றும் வாத்தியக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

laptop dance

மடிக்கணினி நடனத்துக்குத் தடை

இதனிடையே, இன்றைய சுதந்திர நாள்நிகழ்வில் இடம்பெறவிருந்த மடிக்கணினி நடன நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள் மடிக்கணினிகளுடன், நடன நிகழ்வு ஒன்றுக்கு தயாராகி வந்தனர். காலிமுகத்திடலில் ஒத்திகைகளிலும் பங்கேற்றிருந்தனர்.

எனினும், நேற்று நடந்த ஒத்திகையின் போது,  நடனமாடிய மாணவிகளின் கைகளில் மடிக்கணினிகள் இருக்கவில்லை.

இதுகுறித்து நடன ஆசிரியை கருத்து வெளியிடுகையில், மடிக்கணினிகளை நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் மடிக்கணினிகள் இல்லாமல் நடனம் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒத்திகைகளின் போது மாணவிகள் மடிக்கணினிகளுடன் நடனமாடும் காட்சிகள், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரியளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *