மேலும்

எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்

palakai-20172009 நொவம்பர் மாதம் 17ஆம் நாள்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்டிருந்த சூழலில் தொடங்கிய ஓட்டம் இது.

உலகெங்கும் ஈழத்தமிழினத்தின் குரலை உயர்த்திப் பிடித்திருந்த ‘புதினம்’, மௌனிக்கச் செய்யப்பட்ட சூழலில், ஆரம்பித்தது இந்த ஓட்டம்.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்துக்கு ஊடக வழியில் துணை நிற்பதற்கான பயணம் இது.

எட்டு ஆண்டுகளாக பல்வேறு தடைகளையும் தடங்கல்களையும் தாண்டி தொடர்கிறது இந்தப் பயணம்.

இந்தப் பயணத்தில் நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய வலி எமது நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு.

வலிகளும், முட்களும் நிறைந்த இந்தப் பயணம் இனிதான ஒன்றோ இலகுவான ஒன்றோ அல்ல.

வியாபார நோக்கும், விளம்பர உத்திகளுமின்றி ஒரு ஊடகம் நிலைத்து நிற்பது, தமிழ் ஊடகத்துறையில் அசாத்தியம்.

எம்முடன் பயணத்தில் இணைந்த பல ஊடகங்களின் இன்றைய நிலையே அதற்குச் சாட்சி.

அதையும் தாண்டி ‘புதினப்பலகை’யின் பயணம் தொடர்கிறது.

வலிகள் நிறைந்ததாயினும், வலிமையாய்த் தொடரவேண்டும் என்ற ஏக்கமும், வாசகர்களின் ஆர்வமும், இன்னும் நெடிய பயணத்தைத் தொடர வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது.

வணிக மயப்படுத்தப்பட்டு விட்ட ஊடக அறம், சார்புநிலையே நடுநிலையாகப் பேசப்படுகின்ற அவலம் எல்லாம் நவீன உலகில் முதலாளித்துவ ஊடகங்களின் சாபக்கேடு.

சமூக ஊடகங்களினதும், இணைய ஊடகங்களினதும் பெருக்கம், தமிழ் ஊடகத்துறையின் மொழி, அறம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாவற்றுக்குமே பெரும் சவால்.

புற்றீசல்களாய் முளைத்த ஊடகங்கள், ஊடகங்களின் பலத்தை மட்டுமே அறிந்து கொண்டனவேயன்றி, ஊடக அறத்தை மதிப்பதேயில்லை.

இப்படியொரு சூழலில், ஊடக அறத்தில் இருந்து விலகாமல், பொழுது போக்கு மாயைகளுக்குள் எமது வாசகர்களை சிக்கிக் கொள்ள வைக்காமல், அவர்கள் எம்முடன் இருக்கும் சில நிமிடங்களுக்கு பயனுள்ள விடயங்களை மாத்திரம், பகிர்ந்து கொள்கிறோம் என்ற மனநிறைவு எமக்கு நிறையவே உண்டு.

2009ஆம் ஆண்டு இதே நாளில் ‘புதினப்பலகை’ தொடங்கப்பட்ட போது, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குரியதாக இருந்தது.

தமிழ் மக்களின் ஆயுதவழிப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடித்து வைக்கப்பட்ட பின்னர், தமிழ்மக்களின் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழி தெரியாமல் தாயகத்திலும், புலத்திலும் திணறிக் கொண்டிருந்த சூழல்.

அதற்குப் பிற்பட்ட காலங்களில், ஜனநாயக முறைப்படியான தேர்தல்கள், அரசியல் மாற்றங்கள் நடந்தேறின. தமிழ் மக்கள் வாக்குகளைத் தம் கையில் எடுத்துக் கொண்டு பிரதிநிதிகளை தெரிவு செய்தனர்.

எல்லாமே நடந்தாலும், ‘புதினப்பலகை’, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த ஓட்டத்தை ஆரம்பித்த போது, இருந்த அரசியல் சூழலில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. அரசியல் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. அன்றாடப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டும் முயற்சிகள் வெற்றிபெறவுமில்லை, அத்தகைய இலக்குடன், முயற்சிகள் முன்னெடுக்கப்படவுமில்லை.

அரசியல்வாதிகளின் வாக்குறுதி மேடைகளாக மாத்திரம் தேர்தல் களங்கள் இருந்தன. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின் மறந்தே போயின.

காலச்சுழற்சியில் இதுவே தொடர்ந்து விடும் என்ற அச்சமே மேலோங்கியுள்ளது. எங்கிருந்து தொடங்கினோமோ, அங்கேயே நின்று கொண்டிருக்கும் உணர்வே மேலிடுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகளுக்கு நியாயம் தேடும், முயற்சிகளும் கூட, முடங்கிப் போய்த்தான் கிடக்கின்றன.

அரசியல் கைதிகளின் பிரச்சினை தீரவில்லை. காணிகள் விடுவிப்பு நடக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அலைச்சல்களும், போராட்டங்களும் ஓயவில்லை.

ஏன், இந்த நிலை? எதற்காக முன்நோக்கி நகராமல், நகர முடியாமல் இருக்கிறோம்? எம்முன் இருக்கும் தடைகள் என்ன? இவை ஆராயப்பட வேண்டியவை.

இதற்கான பதில்களைத் தேடினால், தான் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் மக்கள் ஓடமுடியும். அடுத்த கட்டம் என்பது முக்கியமானது.

அது தான் வரலாற்றை நிலைப்படுத்திக் கொள்வது.

அடுத்த கட்டத்துக்குப் பாய முடியாமல் இருப்பதை விட, பாய முயற்சிக்காமல் இருப்பது தான், தவறு.

எட்டாவது ஆண்டுப் பயணத்தைத் தொடரும் ‘புதினப்பலகை’,  தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், வரலாறு, மொழி, பண்பாடு சார்ந்த அடுத்த கட்டம் பற்றிய தேடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது.

– ‘புதினப்பலகை’ ஆசிரியர் குழு
   2017-11-17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *