மேலும்

அரசியலமைப்புப் பேரவை செல்லுபடியற்றது – கலைக்கக் கோருகிறார் விஜேதாச

wijedasa rajapaksaஅரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது தவறானது என்றும், அதனை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் .

“மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் எந்தவொருஅரசியல் கட்சியினதும் தலைவராக களமிறங்கியிருக்கவில்லை. அவர் அரசியல் கட்சியொன்றின் சார்பாக, அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட சாதாரண நபராகவே இருந்தார்.

எனவே, அரசியலமைப்பு மாற்றங்களுக்கோ அல்லது சட்டத் திருத்தங்களுக்கோ ஆணை கோருவதற்கான உரிமை அவருக்குக் கிடையாது.

தற்போதைய அரசியலமைப்பை ரத்து செய்வதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை  நிறைவேற்றுவதற்குமான நடைமுறையொன்றை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சபைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டும்.

அரசியலமைப்பின் 85 ஆவது உறுப்புரைக்கமைய, பொது வாக்கெடுப்பொன்றின் மூலம் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

தற்போதைய ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சிறிலங்காவின் ஆட்புல எல்லைக்குள் தனிநாடொன்றை உருவாக்குவதற்கு, சிறிலங்காவுக்குள்ளோ அல்லது வெளியிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரும் ஆதரவளிக்கவோ ,ஊக்குவிக்கவோ ,நிதியளிக்கவோ அல்லது பரிந்து பேசவோ கூடாது என்று அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும்,2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் நாள்  நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட, வழிநடத்தல் குழுவின் அறிக்கையின் சில முன்மொழிவுகள் நாட்டை பிளவுப்படுத்த வழிவகுக்கக் கூடும்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் நாள் நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு பேரவையை செல்லுபடியற்றதாக்க வேண்டும்.

இதற்கமைய, வழிநடத்தல் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்ற தென்றும் அறிவிக்க வேண்டும்.” என்றும் அதில் அவர் கோரியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *