மேலும்

வரும் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு

elections_secretariatஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் நொவம்பர் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தேவையான- வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

உள்ளூராட்சி சபைகள், அவற்றுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியதாக இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில்  3,840 உறுப்பினர்கள் நேரடியாக- வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். எஞ்சியுள்ள உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

முன்னதாக, கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,486 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், 276 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், 24 மாநகரசபைகளும் வரும் 2018 பெப்ரவரி 15ஆம் நாள் தொடக்கம் இயங்கத் தொடங்கும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புக்கு மிகவும் முக்கியமான இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து, கருத்து வெளியிட்ட சிறிலங்கா தேர்தல் ஆணையத்தின், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நொவம்பர் 27ஆம் நாளுக்கு பின்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்று தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர், தேர்தல் நாள் அறிவிப்பு வெளியிடப்படும். என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *